டாடா சாம்ராஜ்ஜியத்தை செதுக்கிய முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல் நல குறைவால் அக்டோபர் 9ஆம் தேதி இரவு மும்பை மருத்துவமனையில் மறைந்தார்.மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 9 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. ரத்தன் டாடாவின் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தார்கள்
தொழிலாளிகளின் முதலாளி என தொழில்துறைகளில் சிலரை குறிப்பிடுவார்கள். அதில் முதல் முக்கியமான இடத்தை ரத்தன் டாடாவுக்கு வழங்கி அழகு பார்த்தனர் தொழில்துறை ஆளுமைகள். சமையலுக்கான உப்பு தொடங்கி எஃகு, ஆட்டோமொபைல், கார்கள் உற்பத்தி, டாப் எம்.என்.சியான டிசிஎஸ் வரை டாடா குரூப் கால் பதிக்காத துறைகள் இல்லை.இந்திய தொழில்துறையின் ஒரு மாபெரும் சக்தியாக உள்ளது டாடா குழுமம்.டாடா குழுமம் சவாலை சந்தித்த காலகட்டமான 1991 ஆம் ஆண்டு, அதன் தலைவராக பொறுப்பேற்றார் ரத்தன் டாடா. அப்போது 5.8 பில்லியன் டாலராக இருந்த டாடா குழுமத்தின் வருவாய்
2011ல் கிட்டத்தட்ட 85 பில்லியன் டாலராக உயர்ந்தது.

நடுத்தர குடும்பங்களுகாக 1 லட்ச ரூபாய்க்குள் கார் டிசைன் செய்ய வேண்டும் என இவர் கனவுடன் திட்டமிட்டிருக்கிறார். திட்டமிட்டப்படி ரத்தன் டாடாவின் கனவு `டாடா நானோ’ கார் மூலம் நனவாகியிருக்கிறது. இப்படி பல விஷயங்களை இவர் டாடா குழுமத்தின் தலைமையில் இருக்கும்போது சாத்தியப்படுத்தினார்.மக்களின் நலனுக்காக பல லட்ச ரூபாயை நன்கொடையாக அறக்கட்டளைகளுக்கு வழங்கியிருக்கிறார். கிட்டதட்ட `டாடா சன்ஸ்’ குழுமத்தின் வருவாயிலிருந்து 66 சதவிகிதத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் என்ற தகவலும் இருக்கிறது.
உண்மையான தேசியவாதியாக திகழ்ந்தவர். தேசத்தின் கட்டமைப்புக்கு பெரும் பங்காற்றியுள்ளார். இந்தியாவையே குடும்பமாக கருதி திருமணம் செய்து கொள்ளாமல் இந்தியாவுக்காக வாழ்ந்த நல்ல மாமனிதர்.மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்தும் ஒரு டீ விற்பவரை போல எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். கோவில்களில் பிரசாதம் வாங்கி சாப்பிடும் அளவிற்கு கடவுள் பக்தி உடையவர் தான் ரத்தன் டாடா.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே ரத்தன் டாடாவின் உடல்நிலை மோசமாக உள்ளது என செய்திகள் வெளியாகின. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து 7ம் தேதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.அதாவது, ‘எனது உடல்நிலை குறித்து வதந்தியான செய்தி சமூகவலைதளங்களில் உலா வருவதை நான் அறிவேன். அது எதுவும் உண்மையில்லை. எனது வயது மூப்பு மற்றும் அதனால் ஏற்படும் தொந்தரவுகளுக்கான பரிசோதனைகள் மட்டுமே மேற்கொண்டு வருகிறேன். என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எனது உடல்நிலை குறித்து போலி செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம்’, எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதோடு, என்னை பற்றி நினைத்ததற்கு மிகவும் நன்றி எனவும் பதிவிட்டிருந்தார். இதுவே ரத்தன் டாடாவின் கடைசி சமூக வலைதளப்பதிவாகும். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல்உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ரத்தன் டாடா மறைவுக்கு மனதார அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
