இலங்கை தமிழர்களின் மனித உரிமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
அதன்படி, இது தொடர்பான பிரித்தானிய பாராளுமன்ற விவாதம் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இன்று மாலை 2.30-4.00 மணி வரை (இலங்கை நேரப்படி இரவு 8.00 மணி முதல் 9.30 மணி வரை) நடைபெறவுள்ளது.
ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) பாராளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தலைமையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு தமிழ் மாவீரர் தினத்தில் தமிழர்கள் நினைவேந்தலை நடத்திய வேளையில், இலங்கை அரச பாதுகாப்புப் படையினர், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் (CTID) தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டமையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை, அமெரிக்க காங்கிரஸ் மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் முதல் மனித உரிமை ஆர்வலர்கள் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி நாட்டின் மனித உரிமைக் கடமைகளுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கொடூரமான சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மீண்டும் சர்வதேச கவனத்திற்கு உட்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ஆம் திகதியன்று போரில் இறந்த தங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூர்கின்ற நிலையில், கடந்த வாரத்தில் மாத்திரம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை இராணுவத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அடங்கிய விரிவான விளக்கக் குறிப்பு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
